Translate

Tuesday, January 1, 2013

பெருங்கதை

பெருங்கதை

கொங்குவேளிர் என்ற சமண முனிவரால் இயற்றப்பட்ட பெருங்கதையில் காப்பியத் தலைவனான உதயணனும், தலைவியான வாசவதத்தையும் இசைக்கலையில் வல்லவர்களாக விளங்குகின்றனர். இந்நூலில் இசை இலக்கணக் குறிப்புகள்பல காணப்படுகின்றன.

1) யாழ், வீணை, குழல், வளை, வயிர் ஆகிய ஐந்து பண்ணிசைக் கருவிகளாகும். பறை, முழவு, முரசு, தண்ணுமை, தடாரி, குடமுழா, பாண்டில் ஆகிய ஏழு தாளக் கருவிகளும் மனிதக் குரலும் இசையெழு தளங்களாகக் குறிக்கப்பட்டுள்ளன. (தமிழர் இசை ப. 263)

2) முரசு எவ்வாறு எந்தச் சூழ்நிலையில் ஒலிக்கப்படும் என்று கூறப்படுகிறது. முரசு அரசவை முன்னிலையில், பெரிய வாயிலுடைய அகன்ற முன்றிலில் இசைக்கப்படும் என்கிறது.

3) யாழ்நூல், நாரதகீதக்கேள்வி ஆகிய இசை நூல்கள் இருந்தன என்று கூறப்படுகிறது. ‘கேள்வி’ என்ற சொல் யாழ்க் கருவியையும், இசை நூலையும் குறிக்கும். இசைப்பயிற்சி பெறுவோர் இத்தகைய நூற்களைக் கற்றுத்தேற வேண்டும் என்கிறது.

4) இசை கற்பிக்கப் பாடசாலைகள் இருந்துள்ளமையைக் கூறுகின்றது.

5) நூலறிவாகிய கல்வியாலும், செவியறிவாகிய கேள்வியாலும் மிகவும் கூர்ந்து அறிய வேண்டியது இசை என்கிறார். யாழும் பாடலும் வேறுபாடின்றி ஒத்து இயங்குதல் வேண்டும். பண்ணிசை விதிகளை நன்கு அறிந்த குற்றமற்ற கேள்வியறிவு உடையவர்களே சிறந்த இசை வல்லுநர் ஆவார் என்கிறது பெருங்கதை.

நன்றி : http://www.tamilvu.org/