Translate

Wednesday, April 24, 2013

வெட்கம் கெட்ட அரசு??

நிறைய டாஸ்மாக்கும்.. கொஞ்சூண்டு டாய்லெட்டும்.. 
பின்னே வெட்கம் கெட்ட அரசும்.. !
---------------------------------------------------------------------------


சென்னையின் ஜன நெருக்கடியான பகுதி அது. அங்கிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிற்குள் வீட்டுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்யும் பெண் விற்பனை பிரதிநிதி (sales girl) ஒருவர் ஒரு மதியவேளையில் நுழைந்திருக்கிறார். 

பகலெல்லாம் வெயிலில் சுற்றியதால் ஏற்பட்ட சோர்வோடு சிறுநீர் கழிக்கும் உபாதையும் ஏற்பட்டிருக்கிறது. அவசரத்திற்கு ஒதுங்க அந்த பகுதியில் பொதுகழிப்பறைகள் எதுவும் கிடையாது. இரண்டு வீட்டுக் கதவை தட்டி விசயத்தை சொல்ல.. சேல்ஸ் கேர்ள் என்பதால் கதவை மூடிவிட்டார்கள். அந்த பெண்ணுக்கு அவசரத்தில் என்ன செய்வதென்று தெரியவில்லை. வேறு வழியில்லாமல் லிஃப்ட்டுக்குள் சென்று சிறுநீர் கழித்துவிட்டார். அந்த பெண்ணின் அதிர்ஷ்டம்.. அப்போது யாரும் லிஃப்ட்டில் ஏற வந்திருக்கவில்லை.

ஆனால் அவர் லிஃப்ட்டை விட்டு வெளியேறி வாசலை நெருங்கும்போது ஒருவர் லிஃப்ட்டில் ஏற வந்திருக்கிறார். உள்ளே சிறுநீர் தேங்கி நின்றதைப் பார்த்ததும், அந்தப் பெண்ணை சத்தம்போட்டு கூப்பிட்டிருக்கிறார். ஆனால் பயந்துபோன அந்த பெண் ஓடிவிட்டார்.

அதன்பிறகு ஆட்களை வரவைத்து அதை சுத்தம் செய்திருக்கிறார்கள். நேற்று இதை அந்த குடியிருப்பில் வசிக்கும் நண்பர் ஒருவர் என்னை சந்தித்தபோது ஆத்திரமாக விவரித்தார்.

அதைக்கேட்டபோது உண்மையில் எனக்கு அந்த பெண் மீது கோபம் வரவில்லை. பரிதாபம் தான் வந்தது. கூடவே கொஞ்சம் அவமானமாக உணர்ந்தேன். என் கோபமெல்லாம் அரசாங்கத்தின் மீது தான்.

ஒரு பெண் சிறுநீரை அடக்க முடியாமல் வேறு வழியின்றி நடப்பது நடக்கட்டும் என்று லிஃப்ட்டில் சிறுநீர் கழிக்கும் நிலைக்கு தள்ளப்படும் சூழல் எத்தனை துன்பமானது. அந்த கணம் அந்த பெண் எத்தனை அவமானகரமாக உணர்ந்திருப்பார்.

சென்னையில் ஜன நெருக்கடியான பகுதிகளுக்குள் சுற்றும்போதெல்லாம் யோசித்திருக்கிறேன்.. வியாபாரிகள் குறிப்பாக பெண்கள் அவசரம்னா எங்கப் போவாங்க.. ?
பத்தடிக்கு ஒரு டாஸ்மாக் சாராயக்கடையை திறந்து வைத்திருக்கும் அரசாங்கம், ஒரு கிலோ மீட்டர் இடைவெளியில் கூட பொதுகழிப்பறைகளை திறந்து வைக்கவில்லை.

அப்படியே இருந்தாலும் அது படுபாடாவதியாக இருக்கும். உள்ளே சென்றுவிட்டு வெளியே வரும்போது நீங்கள் பால்வினை நோயோடுதான் வருவீர்கள். அதற்கும் ஒருவன் மனசாட்சியில்லாம மூன்று ரூபாய் கட்டணம் வேறு வசூலிப்பான்.

ஆண்களுக்கு அவசரம் என்றால் பொது இடம் என்று கூட பார்க்காமல் எங்காவது ஒரு சுவரில் படம் வரைவார்கள். அதை பெரிய அவமானமாக இந்த சமூகம் கருதுவதில்லை. ஆனால் பெண்களின் நிலை? பள்ளி கல்லூரிகளில் பெண் பிள்ளைகளின் நிலை இன்னும் பரிதாபம்.

மேலோட்டமாக பார்த்தால் அந்த பெண் செய்தது தவறுதான். ஆனால் அடக்க முடியாமல் அவசரமாக சிறுநீர் கழிக்க டாய்லெட்டை பயன்படுத்தக்கொள்ள அனுமதிக் கேட்ட பெண்ணுக்கு அனுமதி மறுத்த மத்திய தர மனநிலை எவ்வளவு மோசமானது.

மக்களுக்கு அத்தியாவசியத் தேவையான கழிப்பறைகளை திறப்பதை விட்டுவிட்டு, முக்குக்கு முக்கு டாஸ்மாக் கடையை திறந்து வைத்து சாராய வியாபாரம் செய்து அதை சாதனையாக பீற்றிக் கொள்ளும் அரசாங்கம் தான் இதில் முதல் குற்றவாளி. கழிவறை எவ்வளவு முக்கியமான பிரச்னை என்பது குறித்த தெளிவு அரசுகளுக்கு இல்லை.

மும்பையில் தாராவியில் சென்று பார்த்தீர்களானால் ஒரு டாய்லெட் அறைக்கு வெளியே பத்துபேர் ஒரே நேரத்தில் வரிசையில் நிற்பார்கள். கதவாக சாக்குதான் இருக்கும்.

அதே மும்பையில் பணக்கொழுப்பெடுத்த அம்பானியின் பொண்டாட்டிக்கு 9 ஆயிரம் கோடியில் நவீன வீடும் டாய்லெட்டும். (வித்தியாசமா கக்கா இருப்பாய்ங்களோ !)

இன்னொரு பக்கம் கடவுளுக்கு கோவில் கட்டப்போறோம்னு ஒரு கும்பல் போர் நடத்துது.. முதல்ல மக்களுக்கு டாய்லெட் கட்டிக்கொடுங்கடா.. அப்புறம் கடவுளுக்கு கோவில் கட்டலாம்..

எப்போதாவது செல்லும் இறைவழிப்பாட்டுக் கூடங்களுக்கு இந்த நாட்டில் பஞ்சமில்லை. அத்தியாவசியமான கழிவறைகளுக்கு இடமில்லை.. சாராயவியாபாரம் செய்யும் அரசுகளுக்கு அறிவுமில்லை.. வெட்கமுமில்லை.. :(

-கார்ட்டூனிஸ்ட்.பாலா
23-4-13

மீண்டும் மீண்டும் அவன்!!!

மீண்டும் மீண்டும் அவன்!!!

பேருந்தில் மிதமான கூட்டம் இருந்தது. திடீரென ஒரு சத்தம். “பளார்.” பளார் என்ற அந்த சத்தம் வந்த திசையில் பார்த்தேன். அவன் கன்னத்தில் கை வைத்தபடி நின்றிருந்தான். அறைந்தது அவளாகத்தான் இருக்கவேண்டும். நானும் ஒரு வாரமாக கவனித்துக்கொண்டு தான் இருக்கிறேன். அவள் ஏறும் பேருந்து நிறுத்தத்தில் ஏறுவான். அவளுக்கு பின்னால் போய் நின்றுகொள்வான். இதுவரை அவன் ஒரு நாள் கூட டிக்கெட் எடுத்ததில்லை. அவனுக்கு பதினெட்டு வயதிருக்கவேண்டும். ஒரு கசங்கிய சட்டை அணிந்திருந்தான். அழுக்கான ஜீன்ஸும் செம்பட்டை தலையும் ஒரு பிக்பாக்கெட்டை நினைவுபடுத்தியது.
முகத்தில் வயது கோளாறை பிரதிபலிக்கும் பருக்கள். அவளுக்கு நாற்பது வயதுக்குள் தான் இருக்கும். சுமாரான அழகு.

அவளிடமிருந்து அடி வாங்கிய பிறகு என்ன செய்வதென்று தெரியாமல் நின்றுகொண்டிருந்தான். அதற்குள் இன்னொரு புண்ணியவதி எழுந்து..."என்ன பாத்துட்டு இருக்கீங்க....புடிச்சு வெளிய தள்ளுங்க...பொம்புளைங்கள உரசரதுக்குன்னே வர்றானுங்க....” என்றபடி அவனை நோக்கி பாய்ந்தாள். அவன் தலை குனிந்துகொண்டான். அவன் முகத்தில் அவமானம். இந்த காரியத்தை செய்தது அவனல்ல. அவனுடைய வயது. இந்த வயதின் பலவீனத்தை என்னை போல் ஒரு சைக்காலிஜிஸ்ட் தான் தெரிந்து வைத்திருக்க முடியும். எனக்கு அவன் தோள் மேல் கை போட்டு அவனுடன் அன்பாக ஆதரவாக பேசவேண்டும் போல் இருந்தது. தாய்ப்பால் குடிக்கிற போது தோன்றாத காமம் கன்ட்ராவி எல்லாம் இந்த இரண்டாங்கெட்டான் வயதில் தான் தோன்றுகிறது. சரியான புத்தி மதியும் குடும்ப சூழலும் இல்லாமல் மனதின் இழு சக்திக்கு பலி ஆகும் வாலிபர்கள் எத்தனை பேர். எனக்கு தெரியும். அந்த பெண்ணின் கோபத்துக்கு ஒரு ஞாயம் இருப்பது போல் இவனுடைய தாபத்துக்கும் ஒரு ஞாயம் இருக்கும்.

"என்ன சார் பாத்துட்டு இருக்கீங்க. காது மேல ரெண்டு போட்டு அடிச்சு வெளிய தள்ளுங்க" என்று அந்த அதிவீர பெண்மணி தொடர்ந்து ஆண்களை உசுப்பி விட்டபடியே இருந்தாள்.
நல்ல வேளையாக, பத்து பேர் சேர்ந்து கும்பலாக ஒருவனை அடிக்கிறபோது அதில் பதினொன்றாக தன்னையும் சேர்த்துக்கொண்டு தங்கள் வீரத்தை நினைவுபடுத்திக்கொள்ளும் கோழை ஆண்கள் யாரும் அந்த பேருந்தில் இல்லை. யாரும் அவனை அடிக்க தயாராய் இல்லை. நடத்துனர் விசில் ஊதினார். பேருந்து நடுவழியில் நின்றது. அவன் யாருடைய உத்தரவுக்காகவும் காத்திருக்கவில்லை. தலை குனிந்தபடி கன்னத்தை தடவிக்கொண்டே நடக்க மட்டுமே வரம் பெற்ற ஒரு சவம் போல் அந்த பேருந்தை விட்டு கீழே இறங்கினான். அனைவரும் அவனுக்கு வழிவிட்டு ஒதுங்கிக்கொண்டார்கள். அது அவன் மேல் கொண்ட மரியாதையினாலோ பயத்தினாலோ அல்ல சாக்கடை தண்ணீர் நம் மேல் தெறித்துவிடாமல் ஒதுங்கிக்கொள்கிற எச்சரிக்கை. நான் அவனையே இரக்கத்தோடு பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த துள்ளல் அதிவீர பெண்மணி ஜன்னல் வழியாக கை வீசி ஏதோ ஆவேசமாக அவனை திட்டிக்கொண்டிருந்தாள். துப்பவும் செய்தாள். அறை கொடுத்தவள் மௌனமாக நின்றிருந்தாள். அவள் தான் செய்த காரியத்துக்காய் வருத்தப்பட்டிருக்கலாம்.

ஒரு வாரம் கழித்து மீண்டும் அவனை பார்க்க நேர்ந்தது. இப்போது ஒரு திரைப்படத்தின் இடைவேளையின் போது. பாப்கார்ன் வாங்கி ஒவ்வொன்றாக வாய்க்குள் எறிந்துகொண்டிருந்தேன். அப்போது மேனேஜர் அறையிலிருந்து அவனை இரண்டு போலீஸ்காரர்கள் காளரை பிடித்து இழுத்துக்கொண்டு வந்தார்கள். ஐந்தாறு பேர் பின் தொடர்ந்து வந்தார்கள். போலீஸ்காரர் "ஸ்டேஷனுக்கு வந்து கம்பிளைன்ட் கொடுங்க" என்றார். மேனேஜர் அரை அடிக்கு குனிந்து போலீஸ்காரரிடம்...
"சார் கம்பிளைன்ட் வேண்டாம் சார். தியேட்டர் பேரு கெட்டுடும். சும்மா விசாரிச்சு மிரட்டி அனுப்பிடுங்க " என்றார். போலீஸ்காரர்கள் எப்படி விசாரிப்பார்கள் எப்படி மிரட்டுவார்கள் என்று எனக்கு தெரியும். ஒரு பலி ஆட்டை போல் அவன் நின்றுகொண்டிருந்தான். எல்லோர் பார்வையும் அவன் மேல் படிந்திருந்தது. என் அருகில் இரண்டு சிறுமிகள் நின்றுகொண்டிருந்தார்கள். அதில் ஒருத்தி மற்றவளை பார்த்து

"திருடன்...திருடன்...எப்படி இருக்கான் பாரேன். பாக்கவே பயமா இல்ல....அதான் போலீஸ் புடிச்சிட்டு போகுது" என்றாள்.

எனக்கு இப்போதும் அவன் மேல் பரிதாபம் இருந்தது. என்னை பொறுத்தவரை அவன் ஒரு குற்றவாளி அல்ல. நோயாளி. அவன் தண்டிக்கப்படவேண்டியவன் அல்ல. குணப்படுத்தப்பட வேண்டியவன். அவனுக்கு தேவை போலீஸ்காரர்களின் லட்டி அடியும் பூட்ஸ் மிதியும் அல்ல. அன்பான அரவணைப்பான வைத்தியம்.

கூட்டத்தில் இன்னொருவர்

"என் ஒயிப் வந்து கம்பிளைன்ட் கொடுக்க முடியாது சார். ஷீ இஸ் எ சென்ட்ரல் கவர்மென்ட் எம்பிளாயி. டீசன்ட் பேமிலி சார். நீங்க இவன இப்படியே விட்டுட்டா கூட கவலை இல்ல. ஆனா கம்பிளைன்ட் வேண்டாம் சார்." என்று மன்றாடினார்.

“சரி விடுங்க. கம்பிளைன்ட் எல்லாம் வேண்டாம். இந்த பொறுக்கிய நாங்க பாத்துக்கறோம்”

என்று போலீஸ்காரர் எல்லார் முன்னிலையிலும் அவன் கன்னத்தில் "பளார்" என்று அறைந்தார். அந்த பளாரின் அதிர்ச்சியில் அருகிலிருந்த இரண்டு பெண்களுக்கு கைகள் உதறுவதை கவனித்தேன். உதறலில் பாப்கானில் இரண்டும் சில துளி கொக்ககோலாவும் தரையில் சிந்தியது. அந்த பெண்கள் அதற்கு மேல் காத்திராமல் தியேட்டருக்குள் ஓடினார்கள்.

இப்போது போலீஸ் அவனை இழுத்துக்கொண்டு கீழே போனது. கூட்டம் கலைய தொடங்கியது. சிலர் மட்டும் என்ன நடந்தது என மேனேஜரிடம் விசாரித்தார்கள் .அவர் யாருக்கும் பதில் சொல்ல விரும்பவில்லை. அதற்குள் படம் போட்டுவிட்டார்கள். இப்போது தான் அந்த பெண்மணியை கவனித்தேன். அவள் தான். பேருந்தில் அந்த பையனை கன்னத்தில் அறைந்தவள். மீண்டும் அவளையே தொடர்ந்து வந்து தொந்தரவு செய்திருக்கிறான். தியேட்டர் இருட்டில். அவள் மெல்ல நடந்து வந்து கணவன் அருகில் நின்றுகொண்டாள் எல்லோர் பார்வையும் அவள் மேல் நிலைபெற்றிருந்தது.....

"படம் வேண்டாங்க....வீட்டுக்கு போலாம்.... எல்லாரும் ஒரு மாதிரி பாக்குறாங்க...."
என்றாள். அவர்கள் இருவரும் கீழே இறங்கி ஒரு ஆட்டோ பிடித்து தியேட்டரின் கேட்டை தாண்டி போகும் வரை அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

மீண்டும் இரண்டு வாரம் கழித்து அவனை சந்தித்தேன். இப்போது அதே பேருந்தில். அந்த பெண்மணியின் அருகில் தான் அவன் நின்றிருந்தான். ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவில்லை. திடீரென பேருந்தில் செக்கிங் வந்துவிட்டார்கள். ஒவ்வொருவராக டிக்கெட்டை எடுத்து காட்டிக்கொண்டிருந்தோம். பரிசோதகர் அவனிடம் வந்தார்.
“டிக்கெட் எடு.”

அவன் மௌனமாய் இருந்தான்.

“டிக்கெட் எடுக்கலையா....எங்கேயிருந்து வற கீழே இறங்கு....”

அவன் முதுகை பிடித்து பரிசோதகர் தள்ளினார்.

எல்லோரும் அதை உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தோம்.
அப்போது அந்த பெண்மணி பேசினாள்.

“சார்...அவன் ஊம சார்.....அவனுக்கும் சேத்து நானே டிக்கெட் எடுத்துட்டேன். இதா சார்.”

என்று ஒரு டிக்கெட்டை பரிசோதகரிடம் நீட்டினாள். அவர் டிக்கெட்டின் மேல் ஒரு டிக் அடித்து அவனுடைய கையில் திணித்தார். அவன் கவனமில்லாமல் அதை வாங்கி தன் சட்டை பையில் போட்டுக்கொண்டான். பேருந்து புறப்பட்டது.

இரண்டு வாரம் கழித்து மீண்டும் அவனை சந்தித்தேன். மெரினா பீச்சில். கடலுக்கு மிக அருகில் கடலை பார்த்தபடி நின்றிருந்தான். நான் அவனிடமிருந்து இருபதடி தூரத்தில் அமர்ந்திருந்தேன். திடீரென அவன் கையிலிருந்து ஏதோ ஒன்று தவறியது. காற்றில் அது பறக்கத்தொடங்கியது. அவன் அதை பின் தொடர்ந்து வந்தான். ஒரு இடத்தில் கீழே விழுந்தது. குனிந்து எடுப்பதற்குள் அது மீண்டும் பறந்தது. காற்றில் பறக்கும் அந்த காகிதத்தை, வானத்தை அண்ணாந்து பார்த்தபடி பின் தொடர்ந்து வந்துகொண்டிருந்தான். அந்த காகிதம் என் அருகில் என் காலடியில் விழுந்தது. அதை நான் எடுத்தேன். அவன் என்னை நோக்கி இப்போது ஓடி வந்துகொண்டிருந்தான்.
அந்த காகிதத்தை பார்த்தேன். அது ஒரு பேருந்து பயணச்சீட்டு.
அதன் பின்புறத்தில் குட்டி எழுத்துக்களால் இவ்வளவும் எழுதியிருந்தது.

“உன்னை குப்பை தொட்டியில் எறிந்த நான் பாவி. என் சுயநலத்துக்காக உன்னை அனாதை ஆக்கிவிட்டேன். என்னை மன்னித்துவிடு. தயவு செய்து என்னை பின் தொடராதே. என் கணவருக்கு நீ வந்த பாவ வாசல் தெரியாது. என்றும் உன் நினைவோடு உன் அம்மா.”

அவன் அந்த காகிதத்தை என் கையிலிருந்து கவனமாக வாங்கி சட்டை பைக்குள் வைத்துக்கொண்டான். அதன் பிறகு அவன் அந்த பேருந்தில் வருவதில்லை.

1 ரூபாயில் இந்தியாவிற்கு பேச..

கூகுள் வாய்ஸ் 1 ரூபாயில் இந்தியாவிற்கு பேச...
இந்தியாவிற்கு பேச 1 ரூபாய்,அமெரிக்கா, கனடாவிற்கு வெறும் 50பைசா மட்டுமே.

எதையும் டவுன்லோட் செய்ய வேண்டியதில்லை.
ஜிமெயிலிலிருந்து நேரடியாக உலகின் எந்த மூலைக்கும் தொடர்பு கொள்ளலாம்.

மிக மிக தெளிவான நெட்வொர்க்.(கணினியில் WINDOWS, LINUX, MAC)
மொபைலில் ANDROID, IPHONE, IPAD, IPOD, BLACKBERRY ஆகிய மாடல்களிலும் வேலை செய்கிறது.

தெருக்களில் விற்கும் சில மொக்கையான இன்டர்நேஷனல் காலிங் கார்டுகளை வாங்கி அரைமணி நேரம் டவுன்லோட் செய்து மூன்று மணிநேரம் தொடர்பு கொள்ள முயற்சித்து, ஒன்று இந்தப்பக்கம் கேட்கும், அல்லது அந்தப்பக்கம் மட்டும் கேட்கும். ஒரு நண்பர் இந்தியாவிலிருந்து எனக்கு போன் செய்து சொன்னார் – தயவு செய்து உன் லேப்டாப்பில் இருந்து கூப்பிடாதே!!(என்னே வெறி!)

ஆனால் கூகிள் வாய்ஸ் அப்படியல்ல! கீழுள்ள முகவரிக்குச் சென்று உங்கள் கூகிள் கணக்கில் நுழைந்து குறித்த பட்ச தொகை 10 டாலர் ரீசார்ஜ் (Any Credit card or Debit card பயன்படுத்தி) செய்ய வேண்டும்.

உங்களுக்கு உறுதிப்படுத்த மெயில் ஒன்று வரும், அதை கிளிக் செய்தால் ஒரு நாளைக்குள் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.
எப்படி கால் செய்வது??

ஜிமெயில் கணக்கில் நுழைந்து இடதுபுறம் உள்ள Call Phone கிளிக் செய்தால் போதும் – உலகின் எந்த என்னையும் தொடர்பு கொள்ளலாம்.

சிறப்புகள்:-
ஐந்தே நொடிகளில் அழைக்கும் நபருடன் பேசலாம்
மிக மிகத் தெளிவான வாய்ஸ்.

ஒரே நேரத்தில் பல நபர்களை அழைக்கலாம் (மற்றதை ஹோல்டில் வைத்து)
ஸ்கைப்பை விட குறைந்த கட்டணம் – 1 RUPEE/MIN (0.02 USD)
50 INTERNATIONAL SMS இலவசம்

பேசுவதை ரெகார்ட் செய்து கொள்ளலாம்.

எவ்வளவு நாள் வேண்டுமானாலும் உபயோகிக்கலாம் (தீர்ர வரைக்கும்தானுங்கோ)

PHONEBOOK சேமிக்கும் வசதி.

அமெரிக்கா மற்றும் கனடாவில் வசிப்போர்களுக்கு அவர்களுக்குள் இலவசம்,

மேலும் பல சேவைகள், VOICE MESSAGE & MORE
மற்ற நாடுகளுக்கான கட்டண விபரம் மற்றும் இதர விபரங்களுக்கு :-

https://www.google.com/voice

உங்கள் தட்டில் உணவா...விஷமா ?

உங்கள் தட்டில் உணவா...விஷமா ?
===========================

நம் நாட்டில் சர்க்கரை நோயாளிகள் அதிகமாக இருப்பதற்குக் காரணங்கள் நிறைய உண்டு. நம்மவர்களின் மரபணுக்கள்தான் (Genes) காரணம்; நம்நாட்டின் தட்பவெப்ப சுற்றுச்சூழல்தான் பிரச்னையே; உடல் உழைப்பு மிகவும் குறைந்துவிட்டதை மறந்துவிடக் கூடாது என்றெல்லாம் பட்டிமன்ற பாணியில் அவை விவாதிக்கப்படுகின்றன. இதில், 'அரிசியை மையப்படுத்திய நம் உணவுப் பழக்கமே உண்மையான காரணம்' என்பதும் முக்கியமாக பேசப்படுகிறது!

இத்தகைய சூழலில்... 'சர்க்கரை நோய்க்கும் அரிசிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை' என்று சமீப காலம் வரை பெரும்பாலான டாக்டர்கள் (சர்க்கரை நோய் நிபுணர்கள் உட்பட) உறுதியாக சொல்லிக் கொண்டிருந்த வாதம்... தற்போது முற்றாக உடைபட்டு போயிருக்கிறது.

ஒவ்வொரு உணவும் வயிற்றுக்குள் போய் ஜீரணமாகி, எவ்வளவு சீக்கிரம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகப்படுத்துகிறது என்பதை கணக்கிடுவதற்கு 'கிளைசீமிக் இண்டெக்ஸ்' (Glycemic Index)என்று பெயர். சுருக்கமாக 'ஜிஐ' (GI). சுத்த சர்க்கரையான குளுக்கோஸின் 'ஜிஐ' 100. இதை அடிப்படை அளவுகோலாக வைத்து மற்ற உணவுகளையும் கணித்திருக்கிறார்கள்.

100-70 வரை 'ஜிஐ' உள்ள உணவுகளை, 'அதிக ஜிஐ' என்றும், 70-55 வரையிலான உணவுகளை 'நடுத்தர ஜிஐ' என்றும், 55-க்கு கீழே உள்ள உணவுகளை, 'குறைந்த ஜிஐ' என்றும் அழைக்கிறோம்.

அதிக 'ஜிஐ’ உணவுகள் சீக்கிரம் ஜீரணமாகி, சீக்கிரம் உறிஞ்சப்பட்டு, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீக்கிரம் அதிகரித்து, சர்க்கரை நோய் வருவதற்கு மூலகாரணமாக அமைகின்றன. குறைந்த 'ஜிஐ’ உணவுகள், மெதுவாக ஜீரணமாகி, மெதுவாக உறிஞ்சப்பட்டு, ரத்தத்தில் சர்க்கரை அளவை மெதுவாக உயர்த்துகின்றன. ஆகவே, 70-க்கும் மேல் 'ஜிஐ' உள்ள உணவுகள் ஆபத்தானவை. 55-க்குக் கீழ் உள்ள உணவுகளே பாதுகாப்பானவை.

அப்படியானால், நாம் உண்ணும் உணவின் 'ஜிஐ' எவ்வளவு என்பதை தெரிந்து வைத்துக் கொள்வது ஒவ்வொருவருக்கும் அவசியமானதுதானே!

அதற்கான பட்டியலை மேலே கொடுத்திருக்கிறேன்... பார்த்துக் கொள்ளுங்கள்.
வெளிநாடுகளில், ஒவ்வொரு உணவுப் பண்டத்தின் கவரிலும் 'ஜிஐ' அளவு குறிப்பிட வேண்டும் என்று சட்டமே வந்துவிட்டது.

இதில் நாம் கவனிக்க வேண்டியது - கைக்குத்தல் அரிசியின் ஜிஐ, 50 என்பதுதான். குட்டைரக பொன்னி போன்றவற்றின் 'ஜிஐ' அளவு மிகவும் அதிகம் - 75.

நீளரக அரிசிகளின் (சம்பா, பாசுமதி) 'ஜிஐ' இடைப்பட்ட ரகம்: 56 - 58. ஆக, பாசுமதி அரிசி சாப்பிடும் வடநாட்டவர்களைவிட, பொன்னி அரிசி சாப்பிடும் நம்மவர்கள் சர்க்கரை நோயில் கொடிகட்டிப் பறப்பதற்கு இதுவும் ஒரு காரணம்! இத்தனை நாட்களாக நீடித்துக் கொண்டிருக்கும் 'பொன்னி அரிசிதான் வேண்டும்' என்கிற உங்களின் பிடிவாதம் சரியா... இல்லையா... என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.

'சர்க்கரையைக் கணக்கிடுவதற்கு, உணவுப் பண்டங்களின் 'ஜிஐ' மட்டுமல்லாமல்... சாப்பிடும் உணவின் மொத்த அளவும் (Quantity)கூட கணக்கிடப்படுவது முக்கியம்' என்கிற கருத்தும் உண்டு. இதை 'கிளைசீமிக் லோடு' (Glycemic Load)என்று அழைக்கிறார்கள். சுருக்கமாக 'ஜிஎல்' (GL) நம் உணவில் பொதுவாக மாவுச்சத்து 50%, கொழுப்புச் சத்து 30%, புரதச்சத்து 20% இருக்க வேண்டும். ஆனால், நம்மவர்கள் உணவில் மாவுச்சத்து 75% இருப்பதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அப்படியானால், நம்முடைய 'குளுக்கோஸ் சுமை’ அதிகம்தானே? அதிக 'ஜிஐ' இருக்கும்போது, அதிக 'ஜிஎல்'லும் சேர்ந்தால், சர்க்கரை நோயின் வாய்ப்பு அதிகம் என்பதில் என்ன ஆச்சர்யம்?

மிகவும் சக்தி வாய்ந்த நிறுவனமான 'அமெரிக்க சர்க்கரை நோய்க் கழகம்' (American Diabetes Association)'எந்த மாவுப்பொருளைச் சாப்பிடுகிறீர்கள் என்பது முக்கியமில்லை - எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பதுதான் முக்கியம்’ என்ற நிலைப்பாட்டை எடுத்தது. இதுதான் உலகெங்கும் உள்ள டாக்டர்கள், 'அரிசிக்கும் சர்க்கரை நோய்க்கும் நேரடி சம்பந்தமில்லை’ என்று சமீப காலம் வரை அடித்துச் சொன்னதற்குக் காரணம்.

இதை உடைத்துப் போட்டிருப்பது... அமெரிக்காவின் பாஸ்டன் நகரிலுள்ள ஹார்வேர்டு பல்கலைக்கழகம் சீனா, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளில் கடந்த 22 ஆண்டுகளில் சுமார் மூன்றரை லட்சம் மக்களிடம் நடத்திய ஆராய்ச்சி முடிவு.

thankz 2 Anaivarukkum Nanmai Sei facebook